343. திருமலை அனந்தாழ்வான் வைபவம்
கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்ற பட்டத்துக்குரியவர் ஆச்சார்யன் ராமானுனஜர் ஒருவரே என்றால் அது மிகையாது. இந்து மதத்திற்கு புத்துயிர் ஊட்டி, மதச்சூழல் புதுப்பொலிவு பெற உழைத்த மகான்களில் தலையானவர். ஆழ்வார்களுக்கு அடுத்தபடியாக, ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் இராமனுஜருக்கு முக்கியப் பங்கு உண்டு. சாதி பேதம் பாராமல், வைணவம் சார் மாந்தர் அனைவரையும், திருமாலின் அடியவராகப் பார்த்த மகான் 'உடையவர்' என்று போற்றப்படும் எந்தை இராமனுச முனி ஆவார். திருமால் மேல் அன்பும், பக்தியும் கொண்டு, அவனிடம் பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டவர் இராமனுசர்!
ராமானுசருக்கு, இளையபெருமாள், எம்பெருமானார் என்ற திருநாமங்களும் உண்டு.
அவர் இயற்றிய பல நூல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை:
1. கீதா பாஷ்யம்
2. ஸ்ரீ பாஷ்யம்
3. வேதாந்த சங்க்ரஹம்
4. வேதாந்த சாரம்
5. வேதாந்த தீபம்
6. கத்யத்ரயம்
7. நித்ய க்ரந்தம்
அப்பேர்பட்ட புகழ் வாய்ந்த இராமனுசரின் தலையாய சீடரே, திருமலை அனந்தார்யா! அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்ட ராமானுஜர், தனது சீடர்களை அழைத்து, திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி பராமரிக்கும் பொறுப்பை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, அனந்தார்யா, தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார்.
திருமலையில் அனந்தாழ்வான்
----------------------
அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார். அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.
அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர். இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி, "அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்" என்று கூறினார்.
முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது. அத்தோட்டம், இப்போது 'அனந்தாழ்வான்' தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.
கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில் உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார். அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான். கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர். சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து, தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது! இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்! அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
காஞ்சியில் அனந்தாழ்வான்
--------------------
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார். அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல், தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும், அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது 'ஆச்சார்ய தனியனை' கூறுமாறு பணித்தனர். உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்
அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.
தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. 'வேங்கடாசல இதிகாசமாலா' என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் 'கோயில் ஒழுகு'க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது. அவர் இயற்றிய 'ராமானுஜ சௌத்ஸ்லோகி' என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார். அது போலவே, 'கோதா சௌத்ஸ்லோகி' என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக, வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!
புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, 'பெத்த ஜீயங்கார் மடத்தை' நிறுவினர். தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான், குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்! உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார். அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, 'அனந்தாழ்வான்' என்றே அழைக்கப்படுகிறது.
அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை எடுத்துக் காட்டும் நிகழ்வு ஒன்றைக் கூறி, வைபவத்தை நிறைவு செய்கிறேன்.
ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி, 'உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்' யாரென்று அறிந்து வரச் சொன்னார். அனந்தாழ்வான் சீடனிடம், " உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன், ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்" என்று கூறினார்!!! பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.
'நாரையைப் போன்றவன்' என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், 'கோழியைப் போன்றவன்' என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும், 'உப்பைப் போன்றவன்' என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், 'உன்னைப் போன்றவன்' என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை, பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 343 ***
12 மறுமொழிகள்:
Test comment !
சித்திரையில் சித்திரை நாள் திருமலை அனந்தாண்பிள்ளையின் தெய்வீக பெருமைகளைப் படிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி பாலா.
பெருமாளே ஆசார்யனாக ஏற்றுக் கொண்ட மிகச்சிலரில் அனந்தாழ்வாரும் ஒருவர் என்பதை அறிந்தேன்.
ஆழ்வார் திருநகரியில் இருக்கும் உடையவர் திருமேனி தான் இருப்பதிலேயே மிகத் தொன்மையானது என்று நினைக்கிறேன். மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை உருவாக்குவதற்காக தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது உருவான திருமேனி உடையவர் திருமேனி; மதுரகவியாழ்வார் திகைக்க நம்மாழ்வார் அந்தத் திருமேனி 'வருங்கால ஆசாரியரின்' திருமேனி என்று சொன்னதால் அந்தத் திருமேனி 'பவிஷ்யத் ஆசார்யர்' என்று அழைக்கப்படுவதாகவும் படித்திருக்கிறேன். பின்னர் நம்மாழ்வாரின் நியமனப்படி மதுரகவியாழ்வார் மீண்டும் தாமிரவருணி நீரைக் காய்ச்சி நம்மாழ்வாரின் திருமேனியை அடைந்தார்.
//கொக்கைப் போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல//
மிக அழகாக அனந்தான் பிள்ளையின் வரலாற்றைச் சொல்லியுள்ளீர்கள் பாலா!
ஆதிசேஷன் அம்சமாய் வந்துதித்த இராமானுசர் "இளையாழ்வார்" என்றால்
அவருக்குத் தொண்டு செய்ய அனந்த நாகத்தின் அம்சமாய் வந்துதித்த நம் அனந்தன் "அனந்தாழ்வார்"
இப்படி இருவருமே ஆழ்வார்கள் அன்றோ!
இதோ, நம் அனந்தான் பிள்ளை பற்றி, அடியேன் முன்பிட்ட கதை
//உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார். அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது//
இல்லை பாலா...தாங்கள் அனுமதித்தால், ஒரு சிறு திருத்தம்.
அனந்தான் பிள்ளை, உடையவர் மறைவுக்குப் பின்னர் (திருநாடு அலங்கரித்த பின்), மிகவும் விசனமுற்று, ஓராண்டுக் காலம் துக்கமனுஷ்டித்து, பின்னர் திருவேங்கடமுடையானிடம் பேசினார்.
அப்போது அப்பனுக்கே சங்காழி அளித்த உடையவருக்கு, மலை மேல் சன்னிதி வேண்டினார். பொதுவாக திருமலை மேல், ஆழ்வார் ஆச்சாரியர்களுக்குக் கூட சன்னிதி கிடையாது.
வைகுந்த மலையாதலால், பெருமாளுக்கும் பரிவாரங்களுக்கும் மட்டுமே மூலச் சன்னிதிகள்.
அதனால் தயக்கத்துடன் கேட்ட அனந்தானைக் கடாட்சித்து, பெருமாள் வரம் அருளினார். இப்படி குருவுக்கே இடங்காட்டிய சீடன் ஆனார் நம் அனந்தான்...
பின்னரே உடையவர் சிலை திருமலையில் நரசிம்மருக்கு அருகில் நிறுவப்பட்டது...
நீங்கள் சொன்னது போல் உடையவர் திருவடியான சடாரி, திருமலையில், அனந்தாழ்வான் என்றே அழைக்கப்படுகிறது!
தானுகந்த திருமேனியான திருப்பெரும்பூதூர் திருமேனி தான், அவர் முதலில் தழுவித் தன்னுயிர் தந்தது.
கண் திறக்கும் வேளையிலும் உளி பட்டு, உடையவர் கண்ணிலும் இரத்தம் கொட்டியது!
இப்படி உயிரை-உயிர்ப்பை அதனுள் தந்தார் உடையவர்.
அதனால் தான் இன்றும் கோடையில் மலர்த் துணியும் குளிர்காலத்தில் கம்பிளி கொண்டும் உயிர் மூர்த்தியை அலங்கரிக்கின்றனர்.
அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்!
அன்பின் குமரன்,
தங்களையும், கண்ணபிரானையும் என் வலைப்பதிவுக்கு வரவழைக்க, ஆன்மீகப் பதிவிடுவதே சாலச் சிறந்த மார்க்கம் என்பது எனக்குத் தெரியாதா என்ன :)))
//
சித்திரையில் சித்திரை நாள் திருமலை அனந்தாண்பிள்ளையின் தெய்வீக பெருமைகளைப்
படிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி பாலா.
பெருமாளே ஆசார்யனாக ஏற்றுக் கொண்ட மிகச்சிலரில் அனந்தாழ்வாரும் ஒருவர்
என்பதை அறிந்தேன்.
//
நன்றி ! மணவாள மாமுனிகளும், குரு பரம்பரையின்படி, வைகுந்தனின் ஆச்சார்யன் தகுதி பெறுகிறார் என்று கேள்விப்பட்டதுண்டு.
//
ஆழ்வார் திருநகரியில் இருக்கும் உடையவர் திருமேனி தான் இருப்பதிலேயே மிகத்
தொன்மையானது என்று நினைக்கிறேன். மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை
உருவாக்குவதற்காக தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது உருவான திருமேனி
உடையவர் திருமேனி;
//
தாங்கள் இப்படிக் கூற, நண்பர் கண்ணபிரானோ, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள திருமேனியே தொன்மையானது என்று கூறுகிறார். எப்படிப் பார்த்தாலும், நான் கூறியது தவறாக இருக்கவே சாத்தியம் அதிகம் :))
தாங்கள் கேட்க மறந்த வடமொழித் தனியனின் பொருள் கிழே :)
//
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே நந்தார்ய தேசிகம்
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
//
போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின் திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன். அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!
இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.
எ.அ.பாலா
சீனியர் :)
அன்பின் கண்ணபிரான்,
//மிக அழகாக அனந்தான் பிள்ளையின் வரலாற்றைச் சொல்லியுள்ளீர்கள் பாலா!
ஆதிசேஷன் அம்சமாய் வந்துதித்த இராமானுசர் "இளையாழ்வார்" என்றால்அவருக்குத் தொண்டு செய்ய அனந்த நாகத்தின் அம்சமாய் வந்துதித்த நம் அனந்தன்
"அனந்தாழ்வார்"
இப்படி இருவருமே ஆழ்வார்கள் அன்றோ!
//
வாங்க! நன்றி. நாம் இருவருமே, ஆழ்வாருக்கடியவர் அன்றோ :)))
//
தானுகந்த திருமேனியான திருப்பெரும்பூதூர் திருமேனி தான், அவர் முதலில் தழுவித்
தன்னுயிர் தந்தது.
கண் திறக்கும் வேளையிலும் உளி பட்டு, உடையவர் கண்ணிலும் இரத்தம் கொட்டியது!
இப்படி உயிரை-உயிர்ப்பை அதனுள் தந்தார் உடையவர்.
//
இதுவும் நான் வாசித்தது தான் கண்ணபிரான்! இது இப்படி இருக்க, அனந்தாழ்வான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு சமயம் ராமானுஜரே (அவர் திருநாடு அடைவதற்கு முன்) தன் உடற்கூட்டை விட்டு தற்காலிகமாக நீங்கி, திருமலையில் உள்ள திருமேனி உருவாகக் காரணமாக இருந்தார் என்றும், அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது தான், காலத்தில் பிற்பட்டது என்றும், கேள்விப்பட்டிருக்கிறேன்.
இருந்தாலும், தாங்கள் கூறுவது தான் சரியானதாக இருக்க வேண்டும், நீங்கள் 'சின்னப்பையன்' என்று உங்களைக் கூறிக் கொண்டாலும் :))))
இதில், குமரன் வேறு போட்டுக் குழப்புகிறார் :)
எ.அ.பாலா
//இதில், குமரன் வேறு போட்டுக் குழப்புகிறார் :)//
இல்லை பாலா.
குமரன் சொல்வதும் சரி தான்.
பவிஷ்யதாசார்யன் திருவுருவம் இன்றும் ஆழ்வார் திருநகரி ராமானுச சதுர்வேதி மங்கலத்தில் உள்ளது.
இது தான் காலத்தால் மிகவும் முந்தியது. மதுரகவிகள் காலத்தியது.
இங்கு தான் மாமுனிகள் எதிராஜ விம்சதி என்னும் நூலை இயற்றினார்.
தலைக்கு மட்டும் பொற்கவசம் இருக்கும். புதைந்து போனதைத் தோண்டும் போது உண்டான வடுவை மறைக்க!
ஆனால் இந்த விக்ரகத்தை ராமானுசர் என்று நேரடியாகக் கொண்டாடுவதில்லை. பிற்கால ஆசான் (பவிஷ்யதாசார்யன்) என்று தான் கொண்டாடுகிறார்கள். வெள்ளைச் சாத்துப்படி தான்! காவியும் காஷாயமும் கிடையாது!
அதனால் ராமானுசன் என்று நேரடியாகக் கொண்டாடப் பெறும் விக்ரகங்களில் காலத்தால் முந்தியது தானுகந்த திருமேனி..
இல்லை தமர் உகந்த திருமேனி (மேலக்கோட்டை) என்று சொல்வாரும் உண்டு.
திருமலையில் உள்ள உருவம், இராமானுசர் அனந்தானுக்குத் தந்ததே ஆயினும்...காலத்தால் சற்றுப் பிந்தியது!
சென்னையில் வேங்கடாசல இதிகாச மாலா என்ற நூல் வீட்டில் உள்ளது.
அதில் ஒவ்வொரு நிகழ்வின் போதும் உடையவர் வயது போடப்பட்டிருக்கும்!
அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்!
இருங்க போன் போட்டு கேட்டுச் சொல்கிறேன். அனைவரும் அறிய ஏதுவாகும்!
விரிவான தகவலுக்கு நன்றி, கண்ணபிரான் !
தாங்கள் கூறும்போது ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் :)
எ.அ.பாலா
பாலா,
உங்கள் பதிவை ரசித்து படித்தேன். திருமலை பற்றி ஒரு பாசுரத்திற்கு விளக்கம் சொல்லும் போது இந்த நகழ்வு நடந்தது என்று படித்திருக்கிறேன். ( பாடல் நினைவு இல்லை )
இது போல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டேன் வந்ததா என்று தெரியவில்லை.
தேசிகன்
Thanks, Desikan for your appreciation !
padikka,padikka inimai,aunandam,
anaivarukkum pallandu padugindren.
Arangan arulvanaga.
anbudan
k.srinivasan.
Srinivasan,
thangkaL pArAttukku mikka nanRi !
Post a Comment